சிவகங்கை
சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல் முறைகளில் இருந்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.விழாவினை ஏற்பாடு செய்த பள்ளித்தலைவர் பால.கார்த்திகேயன் கூறியதாவது : தற்போதைய காலச்சூழலில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மிக மிக அவசியமானது. எந்த ஒரு தீங்கும் நடந்த பின்பு வருந்துவதை விட, வரும்முன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது பள்ளிகளின் கடமை. அதற்கான பயிற்சியரங்கமாக இந்நிகழ்வு நடத்தப்பட்டது. எமது பள்ளியில் மழலையர் பிரிவு முதல் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல தொடுதல் தவறான தொடுதல், தவறான நடத்தை, பருவகால உடல்நிலை மாற்றம், சக மனிதர்களுடன் பழகும் பக்குவம், பாலியல் தொந்தரவுகள் குறித்த விழிப்புணர்வு பாடங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இதன் முத்தாய்ப்பாக இன்று
இந்நிகழ்வு நடத்தப்பட்டது” என்றார்.இந்நிகழ்விற்கு பள்ளித்துணைத்தலைவர் தெட்சணாமூர்த்தி தலைமையேற்றார். பொருளாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
சிவகங்கை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் நீலாவதி,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆய்வாளர் குமரேசன் ஆகியோர் கருத்தாளர்களாக கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல் முறைகளில் இருந்து பாதுகாப்பு குறித்த சட்டங்கள், காவல் உதவிகள், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றிய பயனுள்ள தகவல்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எளிமையாக எடுத்துரைத்தனர்.இந்நிகழ்வில் கல்வித்திட்ட இயக்குநர் துரைப்பாண்டியன் வரவேற்றார். பள்ளியின் இணைச்செயலாளர் கலைக்குமார் நன்றி கூறினார். விழாவில் நகர்ப்பிரமுகர்கள் ராமதாஸ், செந்தில்குமார், கமலேஸ்ஶ்ரீதர் அனைத்து மகளிர் காவல் நிலையம் தலைமை காவலர் மஞ்சுளா மற்றும் பெற்றோர்களும் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.